பெருகிவரும் அடிதடிக் கலாச்சாரம்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
29-3-2010
பெருகிவரும் அடிதடிக் கலாச்சாரம்...
நமதூரில் பல்வேறு பிரச்சனைகள் நடைபெற்றுள்ளது, அதில் அரசியல் அடிதடிகள், விளையாட்டில் அடிதடிகள் போன்றவை குறிப்பிடித் தக்கவை. ஆனால் சமீபகாலமாக நமதூர் இளைஞர்கள் மத்தியில் குரூப் சண்டை ஆரம்பித்துள்ளது. மிகுந்த வருத்தமளிக்கிறது.
எதிர்கால சமுதாயத்தின் முன்னோடிகளாக இருக்கும் இளைஞர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவது, சம்மந்தப் பட்டவர்களையும் அவர்களின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கையையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்தையும் பாதிப்பதாக இருக்கிறது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மாணவர்கள் தங்கள் திறமைகளை சர்வதேச தரத்திற்க்கு மேம்படுத்தி கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்க்காக கடிணமாக உழைப்பு இருந்தால் மட்டுமே தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து வளர்ந்துள்ள சமுதாயத்தினரின் போட்டியை சமாலிக்க முடியும்.
ஆனால் நம் சமுதாய இளைஞர்கள் அற்ப்பமான காரணங்களுக்காக அடித்துக் கொள்வது, தப்பான செயல்களுக்காக குரூப் சேர்ந்து கொள்வது, நாங்கள் இந்தத் தெரு அவன் அந்தத் தெரு என குரோதத்தை வளர்த்துக் கொண்டும் வருகிறார்கள்.
பள்ளிப் பருவத்திலேயே சிகரட், குடி, பெண்களை கேளி செய்வது மற்றும் மொபைல் போனில் மறைவாக படம் எடுப்பது போன்ற கேவலமான காரணங்களுக்காக குரூப் சேர்வது தமக்கும், தமது பெற்றோருக்கும், தம் சார்ந்துள்ள சமுதாயத்திற்க்கும் கேடு விளைவிக்குமே தவிர எந்த விதத்திலும் நன்மைபயக்காது.
தவறான வழிகாட்டலே காரணம்
நபி(ஸல்) அவர்களை தமது வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளாமல் இஸ்லாமிய சமுதாயம் புறக்கணித்ததின் விளைவு இன்று, சமுதாயம் எதிர்காலத்திலாவது நேர்வழி பெரும் என்ற சிந்தனையும் தகர்ந்துள்ளது.
நட்பு பற்றி இஸ்லாம்
நண்பர்களுக்கிடையே இருக்க வேண்டிய பொதுவான அனுகுமுறைகளும், நட்பின் இலக்கணமும் பற்றி இஸ்லாம் கூறுவதைப் பாருங்கள்...
"நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்புமீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள், அல்லாஹ் கடுமையாக தண்டிக்கக்கூடியவன்.”
திருக்குர்ஆன், அல் மாயிதா 5- 2
ஒரு நண்பன் தவறு செய்யும் போது பார்த்துக் கொண்டு இருப்பவன் அல்லது அவனது தவறுக்கு வக்காலத்து வாங்குபவன் உண்மையான நண்பன் இல்லை, மாறாக அவன் செய்யும் தவறை சுட்டிக்காட்டி நேர்வழிப்படுத்த முயற்சிப்பவனே உண்மையான நண்பன்.
லுக்மான் (அலை) தம் மகனிடம் ” என் அருமை மகனே! நீ தொழுகையை நிலைநாட்டுவாயாக, நன்மையை (மக்களுக்கு) ஏவி, தீமையை விட்டும் (மக்களை) தடுப்பாயாக, உமக்கு ஏற்படும் கஷ்டங்களை பொறுத்துக் கொள்வாயாக, நிச்சமாக இதுவே வீரமுல்ல செயல்களில் உள்ளதாகும்.”
திருக்குர்ஆன், அல் லுக்மான் 31-17
இதை லுக்மான் (அலை) தம் மகனுக்கு போதித்தது போல் தம் பிள்ளைகளுக்கு போதிக்கவேண்டிய கடமை ஒவ்வெரு தகப்பனுக்கும் உள்ளது.
நன்மையை மக்களுக்கு ஏவ வேண்டும், (சொல்றவன் ஒழுங்கா இருந்து கொண்டு சொன்னால் தான் கேட்பவன் அதை ஏற்றுக் கொள்வான்). மக்களிடையே நிலவும் தீமையை தடுக்க வேண்டும். (தான் ஒழுக்கமானவனாக இருந்துகொண்டு மற்றவரின் தீமையை தடுக்கும் போதுதான் அந்த உபதேசம் மக்களிடையே எடுபடும்).
இந்த உபதேசம் தம்மை முதலில் சரிசெய்து கொள்ளத் தூண்டும். சொல்றவன் ஒழுங்கா இருக்கனும் என்று நினைப்பான். இது மிகப்பெரிய பயிற்சி.
ஆகவே சொல்வது ஒவ்வெருவரின் கடமை அதே நேரத்தில் தான் முதலில் சரியாக இருக்கவேண்டும் என்பது நிர்பந்தம்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு நிழல் இல்லாத மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழுபேருக்கு அளிக்கிறான்.
1. நீதியை நிலை நாட்டும் தலைவர்
2. அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊரிய இளைஞன்
3. பள்ளிவாசல்களுடன் தம் உள்ளத்தை தொடர்பு படுத்திய ஒருவர்
4. அல்லாஹ்வுக்காகவே இணைந்து அல்லாஹ்வுக்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்
5. உயர் அந்தஸ்திலுள்ள ஒரு பெண் தவறான வழிக்கு தம்மை அழைக்கின்ற போது, நான் அல்லாஹ்வை பயப்படுகிறேன் என்று சொன்ன மனிதர்.
6. தம் வலக்கரம் செய்த தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக செய்பவர்
7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்துபவர்
என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹீரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புஹாரி 660 ல் இடம் பெருகிறது.
மேற்கூறப்பட்ட ஹதீஸில் பல்வேறு அந்தஸ்துகள் கூறப்பட்டுள்ளது அதில் 4ல் அல்லாஹ்வுக்காகவே இணைந்து அல்லாஹ்வுக்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள். இதைத்தான் அல்லாஹ்...
இஸ்லாத்தை கேளிப்பொருளாக ஆக்கியவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். 5-57
அல்லாஹ்வுடைய மார்கத்தை உதாசீனப்படுத்துபவர்கள், கேளிப்பொருளாக்குபவர்கள், வரம்புமீறக்கூடியவர்கள் ஆகியோரை அல்லாஹ்வுக்காக உற்ற நண்பர்களாக்க வேண்டாம். என்று மேல் கூறப்பட்ட ஹதீஸ் மற்றும் திருமறையின் வசனம் தெளிவு படுத்துகிறது.
இன்னும் சில நண்பர்களை பற்றி திருமறைக்குர்ஆன் 43-67 ல்
”உற்ற நண்பர்களாக இருந்தோரில் (அல்லாஹ்வை) அஞ்சி, தமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருந்தோரைத் தவிர (மற்றவர்கள்) அந்நாளில் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருப்பார்கள்.”
இவ்வசனம் இம்மையில் நண்பர்களாக இருந்தவர்கள் மறுமையில் பகைவர்களாக இருப்பார்கள் என்று சொல்லிவிட்டு அதற்க்கு ஒரு அளவுகோலையும் சொல்கிறது.( (அல்லாஹ்வை) அஞ்சி, தமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருந்தோரைத் தவிர) இந்த அளவுகோலை மறுத்த அனைவரையும் (முஸ்லிமாகட்டும் அவன் காபிராகட்டும் அவர்கள்) பகைவர்களாக இருப்பார்கள் என அல்லாஹ் கூறுகிறான்.
பலிக்குப்பலி வாங்குவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் ரத்து செய்தார்கள் அதில் முதலாவதாக ரத்து செய்யப்படுவது எங்கள் குடும்பத்தை சார்ந்த ரபீஆவுடைய குழந்தைக்காக வாங்க வேண்டிய பலி என்றார்கள்.
முஸ்லிம் 2137, திர்மிதி 3012
நம் நண்பர்களுக்கு இந்த உலகத்தில்தான் உதவிக்கொள்ள முடியும்!
அல்லாஹ்வுடைய மார்கத்தை நம் நண்பர்களுக்கு எடுத்துவைப்போம்!!
நல்ல நண்பர்களை உருவாக்குவோம்!!!